Saturday, April 30, 2011

வீட்டுக்கு வீடு ஒரு கதை உண்டு

A Tamil version of my earlier blog post ... A story from every home...

அவர் நம் ஒவ்வொருவர் வாழ்வையும் தொட்டார் . சின்ன சின்ன விதங்களில். நம் ஒவ்வொருவரிடமும் அவரைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது. அவரைப் பற்றி . அவர் அன்பைப் பற்றி. அவர் வாழ்வும் நம் வாழ்வும் இணைந்த வைபவத்தைப் பற்றி, நம் மனங்களில் அவர் நிறைந்து நம்மை வழிகாட்டிய கதைகளைப் பற்றி. இவை சாயி சுயசரிதைக் கதைகள்.

சில கதைகள் எங்கும் எப்போதும் எழுதப்படாத கதைகள். சில கதைகள் நம் இதயத்தில் மட்டும் நிறைத்து வைத்து போற்றப்படும் கதைகள், அவை இனிமேலும் எழுதப் படாது. சில கதைகள், மற்றவர்களிடம் நாம் சொல்ல வேண்டிய கதைகள். நம் வாழ்வில் அவர் அன்பை எப்படி அன்பை நிறைத்தார் என்பதை உலகத்துக்குச் சொல்லி ஆனந்தப்படவேண்டிய கதைகள். சிலவற்றை கதை என்று சொல்ல முடியாது, சின்ன நிகழ்ச்சிகள் , நகைச்சுவையான வாக்கியங்கள், ஏதோ ஒரு நாள் இங்கே இந்த மண்டபத்தில் நாம் அமர்ந்திருந்த போது நடந்த சம்பவங்கள், நம் நினைவில் நிற்கின்றன. நாம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து யோசிக்கும் போது நம் உள்ளிருந்து அவை நீர்க்குமிழிகள் போல் நம் மன ஏரியிலிருந்து எழும்பி மேலே வருகின்றன.

சில கதைகளில் வசனம் இருக்காது. நாம் அங்கே அமர்ந்திருந்த போது, அவர் நம்மைத் தாண்டி போகும்போது, நம் கண்களில் கூர்ந்து கவனித்த அந்தப் பார்வை. நமக்காக, நாம் மட்டும் புரிந்து கொள்ளுவது போன்ற பார்வை. அவர் பேசவில்லை ஆனால் அர்த்தம் புரிந்துவிடும். நாம் கேட்க வேண்டும் என்று நினைத்தோம், கேட்கவில்லை, ஆனால் அந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.

சில கதைகளின் முக்கியத்துவம் நாம் பல நாட்குளுக்குப் பிறகு தான் உணர்ந்தோம். அறிய முடியாத இறை மனதை நம் சிறு மனத்தால் அறிய முயன்று, அது கொடுத்த விடையை வைத்து அவரது விந்தையை கணக்கு போட முயன்றிருப்போம்.

சில சமயங்களில் நமக்கு தோன்றிய ஒரு எண்ணம் , அது அவரிடமிருந்து வந்தது என்பதை நாம் உணர்வோம். அந்த எண்ண அனுபவம் கூட ஒரு கதையே.

இது உங்கள் அனுபவம் , அல்லது என் அனுபவம் மட்டும் அல்ல. வீட்டுக்கு வீடு இந்த சாய் கதைகள் உண்டு. சில கதைகள் பிறருக்கு சின்னதாக இருக்கலாம். ஆனால் , நமக்கு அது இனிமையான கதை, முக்கியமான கதை. ஏனென்றால், அது அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதை அல்ல, நம் வாழ்வில் நடந்த கதை. 'Dunnapotha' என்று செல்லமாக திட்டி இருப்பார். 'Good Boy' என்று புகழ்ந்திருப்பார். அதுவும் ஒரு இனிமையான கதை தான்.

மற்றவர்களின் அனுபவத்தைப் பற்றி நாம் கேள்வி கேட்கலாம், விவாதம் செய்யலாம், மறுக்கலாம். ஆனால் , நம் உள்ளுணர்வை நம்மால் மறுக்க முடியுமா ? நமது உள்ளுணர்வுகளுக்கு நாமே முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனில் , நாம் எதை ஆதாரமாக வைத்து வாழ்க்கையை வாழ்கிறோம் ? நம் கதை, நம் உள்ளுணர்வுகள் , நமக்கு ஆழமானவை . 'Personal'-ஆக முக்கியமானவை. அதனால் தான், அவர் உலகத்துக்கே போதகராக இருந்திருக்கலாம் , ஆனால் நமக்கு 'Personal God'- ஆக இருந்தார். அந்த நாள், அவரவர்கள் எங்கெங்கோ இருந்தாலும், அங்கிருந்தே, நன்றி உணர்வுடன் , அவருக்காக ஒரு துளி கண்ணீர் சிந்திய , அந்த லக்ஷோபலக்ஷம் மக்கள் அனைவருக்கும் அவர், தனி தனியாக , 'Personal God'- ஆக இருந்தார். அவர் இந்த வீட்டின் தலைவர், ஒவ்வொரு உரையாடலையும் அமைதியாக கேட்பவர், ஒவ்வொரு உணவு வேளையின் போதும் கண்ணுக்குத் தெரியாத விருந்தாளி. ஒவ்வொருவர் வீட்டிலும், இன்று , அவரவர்கள் 'Dinner Table '-இல் , இந்த சாய் கதைகளை தான் , ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாம் சிறிய, ஆழ்ந்த , 'Personal' கதைகள் , நம் வாழ்வில் அவர் வந்த கதை, நம் உள்ளுணர்வின் கதை, நம்மை அந்த திருச்சிற்றம்பலம் தடுத்தாட்கொண்ட கதை.

கதை இருக்கிறதோ இல்லையோ, அதை சொல்லுகிறோமோ இல்லையோ, நாம் மீண்டும் மீண்டும் இங்கே வந்தோம். ஒவ்வொரு 'New Year'-உம் , சிவராத்திரியும் , நவம்பரிலும் வந்தோம். இங்கே வந்தால் நிம்மதி என்று நாடி வந்தோம். அப்படி வருவோருக்கெல்லாம் அன்பு தரும் ஆல மரமாக அவர் இந்த ஆஸ்ரமத்தை அமைத்தார். இந்த அன்பு நிழலின் குளிர்ச்சியில் நிம்மதியை தேடி வந்தவருக்கெல்லாம் அது கிடைத்தது .

இந்த அன்பு உணர்வுகள், கண்ணுக்கு தெரியாதவை , ஆனால் , 'இது சத்தியம் என்று எனக்கு தெரியும்', என்று அழுத்தமாக எழும் உள்ளுணர்வுகள். இந்த உணர்வுகளை வைத்து தான் , சுவாமியைப் பற்றிய ஒரு வடிவத்தை நாம் நமது மனங்களில் உருவாக்கி இருக்கிறோம். அந்த வடிவம், லோகாயதமான வடிவம் அல்ல. அது உணர்வுகளின் வடிவம். வருடக்கணக்கில் , மிக மெதுவாக, ஒரு எறும்பு தானியம் சேகரிப்பதுபோல , சேர்த்து வைத்த, வடிவம். நாம் அவரிடம் கேட்ட கோரிக்கைகள் , இந்த உலகம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அவர் நமக்கு கொடுத்த பரிசுகள் காலப்போக்கில் ஒளி குறையலாம். ஆனால் , நாம் அவரது கண்ணோடு கண் நோக்கிய போது , அவரை பிரார்த்தனையில் நினைத்த போது , நம் இதயம் என்னும் 'Camera'வில் , அவரது வடிவத்தை செதுக்கிய , அந்தக் கண நேரம், அது இந்த உலகத்தியது அல்ல. அது காலம் கடந்தது, லோகாயதத்துக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணர் , ஆயிரக்கணக்கான கோபிகைகளுக்கு , ஒவ்வொருவருக்கும் ஒரு கிருஷ்ணராக வடிவெடுத்தது போல, நாம் ஒவ்வொருவருக்கும் அவர் நமது இதயங்களில் ஒரு வடிவத்தை வரைந்திருக்கிறார். விதம் விதமாக, வித்தியாசமான அழகுடன், உணர்வுகளின் வடிவம் ஒன்றை அளித்திருக்கிறார்.

கல்வி, மருத்துவ வசதி, குடிதண்ணீர் - இவை மூன்றும் கட்டாயம் இலவசமாக தரப்பட வேண்டும் - என்று அவர் நம்பினார். நமக்கு ஒரு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையை எப்படி செயலாக்க வேண்டும், பல்லோர் போற்றும் உதாரணமாக , ஊக்கமளிக்கும் வகையில் , எப்படி நம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் , என்பதை அவர் உலகத்துக்கு செய்து காட்டினார். எனக்கு 'rights' இருக்கிறது , உரிமை இருக்கிறது என்று போராடுகிறோம். ஆனால், அதுவே , 'responsibility' என்று வரும் போது, பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றால், பயந்து ஓடுகிறோம். அதை, மற்றவர் பெயருக்கு மாற்றி, அவரை எப்படி குறை சொல்லலாம் என்று யோசிக்கிறோம். அப்படிப்பட்ட இந்த உலகத்திலே, சுற்றி இருப்போரின் பிரச்சினைகளுக்கு, சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு தனி மனிதன் எப்படி பொறுப்பு எடுத்துக்கொண்டு , அந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதை நிரூபித்தார். அவர்களுடைய கஷ்டத்தை, தனது கஷ்டமாக , அவர் நினைத்தார்.

'1980 'இல் , ஒரு இலவச பல்கலைக் கழகம் வரும் என்றும், அதில் மனித குண மேம்பாடுகளையும், 'Character Building ' -உம் இணைந்ந்து போதிப்போம் என்று அவர் சொன்ன போது, அவர்கள் எல்லாம் கை கொட்டிச் சிரித்தார்கள். இன்றைக்கெல்லாம் அந்த பல்கலைக்கழகம் 30 ஆண்டுகள் முடித்துவிட்டு இன்னும் வெற்றி நடை போடுகிறது. அதன் மூலம் பல ஆயிரம் பேர் வாழ்க்கையைத் தொட்டார். '1990'-இல் , ஒரு உயர்தர மருத்துவ மனை உருவாக்கி , ஏழை மக்களுக்கு அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்வோம் என்று அவர் சொன்ன போது, அவர்கள், எள்ளி நகையாடினார்கள். இன்றைக்கு அந்த மருத்துவ மனை 20 வருடங்கள் முடித்தாகி விட்டது. பற்றாக்குறைக்கு , அந்த மருத்துவ மனை 10 வருடங்கள் முடித்த போது, அதே அளவில் , இரண்டாவது மருத்துவ மனையையும், கட்டினார். இன்னும் பல ஆயிரம் பேர் வாழ்க்கையைத் தொட்டார். '1995'-இல் , வறண்ட பூமியாக இருந்த, ஒரு மாவட்டம் முழுவதற்கும் , பல நூறு மைல் தொலைவிலிருந்து தண்ணீர் கொண்டு வருவேன் என்றார். அதற்காக அவர் கடன் வாங்க நேரிட்டது. அப்போது அவர் சொன்னார் : ' நல்ல எண்ணத்தோடு நல்ல காரியம் செய். உதவி தானாக வரும். ' அதற்கு பிறகு, இன்னும் 4 மாவட்டங்களுக்கு குடிதண்ணீர் திட்டத்தை அமுல்படுத்தும் அளவுக்கு அது விரிந்தது. அதோ, இன்னும் பல ஆயிரம் பேர் வாழ்க்கையைத் தொட்டார்.

அவரை எல்லாரும் 'Personal God ' என்று நம்பாமல் இருக்கலாம், பரவாயில்லை. ஆனால், சேவை காரியங்கள் மூலம், கண்காணாத அந்த பல ஆயிரம் அந்நிய மனிதர்களின் வாழ்க்கையில் அவர் விளக்கேற்றி வைத்தார். அந்த பல்லாயிரம் மக்களுக்கு அவர் அன்னியர் அல்லர். அவர்களுக்கு , அவர், வீட்டை வாழ வைத்த வள்ளல். எங்கிருந்தோ, பல ஆயிரம் மைல் தூரத்திலிருந்து வந்த நோயாளியைப் பொறுத்தவரை, அவர் ஒரு வள்ளல். ஒரு average middle class வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன் , டிகிரி படிப்பு படிக்க கஷ்டப்பட்ட இளைஞனுக்கு , அவர் ஒரு வள்ளல். ஒரு மலை நாட்டு கிராமத்தின் வறண்ட தொண்டையைப் பொறுத்த வரை , அவர் ஒரு வள்ளல். இவை எல்லாவற்றிலும் , அவரிடம் வாங்கி கொண்டவர்கள் , கல்வி, வைத்தியம், குடிதண்ணீர் ஆகியவற்றை வாங்கி கொண்டு, நன்றியை செலுத்தினார்கள். ஆனால், அவர் கொடுத்தது, அதுவல்ல. அவர் கொடுத்தது அன்பு மட்டும் தான். அவர் எப்போதும், எல்லோருக்கும், அன்பை மட்டும் தான் கொடுத்தார், மற்றவை எல்லாம் அன்பை வெளிப்படுத்த , ஒரு கருவி தான். இந்த சேவைக் காரியங்களை செய்த சேவகர்களுக்கும், பக்தர்களுக்கும், அவர் அதோடு நிறுத்தவில்லை, அவர்கள் சேவையின் தரத்தை உயர்த்த விரும்பினார் . வெறுமனே வேலை செய்தால் போதாது, அதில் அன்பும் , சரியான மனோபாவமும் இருந்தால் தான் பிரயோஜனம் என்று போதித்தார். உன்னுடைய, உண்மையான தெய்வீக இயல்பை உணர்வாயாக , பிறகு நீ எது செய்தாலும், நன்மையாக தான் இருக்கும், என்றார்.

நாம் சொல்கிறோம் : அவர் ஒரு ஹிந்துவை 'Better' ஹிந்துவாக மாற்ற வந்தார் என்றும், ஒரு முஸ்லிமை 'Better' முஸ்லிமாக மாற்ற வந்தார் என்றும், ஒரு கிறித்தவனை 'Better' கிறித்தவனாக மாற்ற வந்தார் என்றும் சொல்கிறோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக , அவர் ஒவ்வொரு மனிதனையும், 'Better' மனிதனாக , மாற்ற வந்தார் என்று சொல்லலாம். மனிதனுக்கு, அன்பு என்றால் என்னவென்று தெரிய வேண்டும், அது மற்றவர் மனதை எப்படி மாற்றும் என்பது புரிய வேண்டும். நம்மை சுற்றி உள்ளவர்களின், சமுதாயத்தின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, அதை தீர்க்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டு , மனிதனோடு மனிதன் நேசமாக வாழ வேண்டும். ஒருவர் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு, நாம் நன்மையை பகிர்ந்து அளித்து, அவர் என்றாவது ஒரு நாள், வேறு ஒருவருக்கு நன்மை செய்வார் என்று நம்பி , நன்மையை சுற்றி வரச் செய்ய வேண்டும். அன்பின் மூலமும், சேவையின் மூலமும், தனக்கு உள்ளிருக்கும் தெய்வத் தன்மையை அவன் உணர வேண்டும். பிறகு, அதே தெய்வத்வம் தான் அங்கிங்கெனாதபடி , எங்கும் நிறைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும். இதை சொல்லத்தான், இதை செய்து காட்டத்தான் இந்த தெய்வம் வந்தது.

என்றாவது ஒரு நாள், பல ஜன்மங்கள் கழித்து, நமது பிறவி பயணத்தில், நாம் ஒரு நாள், இந்த உண்மையை உணரத் தான் போகிறோம். நமது 'Personal God '-க்கும் , நமக்கும், அதிகம் வித்தியாசம் இல்லை, நாமும் தெய்வம் தான், என்பதை உணரத் தான் போகிறோம். அதைத் தானே அவர் முதலிலேயே சொன்னார், நமக்குத் தான் , இது புரிபடுவதற்கு நிறைய 'time' ஆகிவிட்டது, என்று நினைப்போம்.

நம் உடம்பு, நம் மனம், நம் வினை, நம் விதி, நமது வாழ்வின் குறிக்கோள் , நம் வாழ்வின் கம்யம் , நம் உண்மை இயல்பு, - இதெல்லாமே நமக்கு புரியவில்லை. இந்த லக்ஷணத்தில், நாம் , அவரையும், அவர் உடம்பையும், அவர் அவதார நோக்கத்தையும் , புரிந்து கொள்ள முடியுமா என்ன ?

அவரை ஏன் நாம் நேசிக்கிறோம் தெரியுமா ? அவருடைய புகழை அளவிட முடியாது, அவரை புரிந்து கொள்ள முடியாது. அவரை புரிந்து கொண்டு அப்புறமாக அவரை நேசிக்க முடியுமா என்ன ?

அவர் முன்னிலையில், நாம் யார் , என்பதை அவர் நமக்கு காட்டுகிறார். அவருடைய திருவுருவப் படத்தின் தீபத்தின் முன்பு, நமது மனம் என்ற ஏரியில் தோன்றும் பிம்பத்தில், நம்மை நாம் காண்கிறோம். வேறு எங்கெங்கோ தேடி கிடைக்காத, நம்மை பற்றி, நாமே அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை , அவர் முன்னால் நாம் உணர்கிறோம். அந்த உள்ளுனர்வுகளுக்காக தான் நாம் அவரை நேசிக்கிறோம். நீங்கள் இந்த நிலையை அடைந்திருந்தால் , இந்த பிரசாந்தி நிலையத்தை, அடைந்திருந்தால், இது உண்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

Thank you for your comments....

 
THANK YOU: These reflections draw sometimes from readers and friends who initiate ideas, build up discussions, post comments and mention interesting links, some online and some over a cup of coffee or during a riverside walk. Thank you.

Disclaimer: Views expressed in this blog are the blogger's personal opinions and made in his individual capacity, sometimes have a story-type approach, mixing facts with imagination and should not be construed as arising from a professional position or a counselling intention.